கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு 77.

தேர்தலில், அ.தி.மு.க. கூட்டணியில் சசிகலா மற்றும் தினகரனை கொண்டுவர, பா.ஜ.க. எடுத்த முடிவுகள் தோல்வியில் முடிய காரணம் என்ன?

Advertisment

சசிகலாவும் தினகரனும் இருந்தால் தேர்தலில் தங்கள் கூட்டணிக்கு வசதியாக இருக்கும் என்பது பா.ஜ.க. கணக்கு. இருவரும் வராமல் இருந்தால்தான் எங்களுடைய வசதி வாய்ப்புகள் இதேபோல அமோகமாக இருக்கும் என்பது எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க.வினரின் கணக்கு.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்.

தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்த 8,200-க்கும் மேற்பட்டவர்களிடம் ஒரே நாளில் நேர்காணல் நடத்தி முடித்து சாதனை படைத்துள்ளதே ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தலைமையிலான அ.தி.மு.க?

ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வில் நேர்காணல் எதுவுமின்றி, கள நிலவரத்திற்கேற்ப வேட்பாளர் தேர்வு நடைபெற்று பட்டியல் வெளிப் படும். இ.பி.எஸ்-ஓ.பி.எஸ். இருவருக்கிடையிலான அதிகாரப் போட்டியில், ஜனநாயக முறைப்படி நடந்துகொள்வதுபோல காட்டுவதற்காக ஒரே நாளில் மொத்தமாக நேர்காணல் நடைபெற்றுள் ளது. அதில், விருப்பமனு அளித்தவர்களின் மன நிலையைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பு ஏதுமின்றி, இ.பி.எஸ் ஸின் அறிவுரை மட்டுமே முக்கியமானதாக இருந்திருக் கிறது. அதே நேரத்தில், கலைஞர் காலத்தில் தி.மு.க.வில் நடத்தப்படும் நேர்காணல்களில் வேட்பாளரின் சொந்த பலம், சாதி பலம், மாற்று வேட்பாளர்கள் யார் யார் போன்ற கேள்விகளுடன், எவ்வளவு செலவு பண்ணுவீங்க என்று கேட்கப்படும். இந்தமுறையும், விருப்பமனு அளித்தவர்கள் அனைவரிடமும் நேர்காணல் நடத்தப்பட்டது. சுற்றி வளைத்து கேள்விகள் கேட்காமல் நேரடியாக, "எத்தனை கோடி செலவு செய்வீங்க?'’என்பதுதான் ஒற்றைக் கேள்வி.

ம.ராகவ்மணி -குப்பம், ஆந்திரா

தமிழ்நாட்டில் வருகிற தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்புள்ளதா?

Advertisment

அது அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியின் வெற்றி வாய்ப்பையும், அதில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. எத்தனை தொகுதி கள் வெற்றிபெறப் போகிறது என் பதையும் பொறுத்தது. எதிர்க்கட் சிக். கூட்டணியில் உள்ள தோழமைக் கட்சிகள் தி.மு.க.வுக்கான வெற்றிப் பாதையை உருவாக்கித் தருகின்றன.

கே.ஆர்.உபேந்திரன் -என்.கே.ரோடு, தஞ்சாவூர்

இதுவரை ரூ.98 லட்சம் செலவு செய்து, ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடைபெற்றுவரும் நிலையில், வன்னியர் ஒதுக்கீடு சம்பந்தமாக ஆணையம் அமைத்துள்ள நிலையில், அந்த இரண்டின் முடிவு பெறாமலேயே, வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறதே?

அதிகாரத்தை மீண்டும் அடையவேண்டும் என்றால் எந்தவித அதிகார மீறலையும் செய்ய லாம் என்பது ஆளுங்கட்சியின் தேர்தல்நேர எழுதப்படாத விதி.

வாசுதேவன், பெங்களூரு.

ஸ்லீப்பர் செல்கள் என்ன செய்யும்?

செல்லரிக்கும்.

_________

தேர்தல் களம்!

Advertisment

ss

ம.ரம்யாமணி வெள்ளக்கோவில் திருப்பூர் மாவட்டம்.

தேர்தல் பறக்கும் படை, தேர்வு பறக்கும் படை என்ன ஒற்றுமை -வேற்றுமை?

பொதுவாக, தேர்தலுக்கு முன்பாகவே பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்பதால் தேர்தல் பறக்கும் படைக்கு முன்பாகவே தேர்வுகளுக்கான பறக்கும் படைக்கு வேலை இருக்கும். இம் முறை, தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு மறுநாள்தான் +2 பொதுத்தேர்வுகள் தொடங்குவதாக பள்ளிக்கல்வித்துறை அறி வித்துள்ளது. எனவே, தேர்வு நேரப் பறக்கும் படைக்கு இப்போது அவசரமில்லை. தேர்தல் அறிவிப்புகள் வெளியாகி, நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துவிட்டதால், தேர்தல் பறக்கும் படையினர் தங்கள் பணியைத் தொடங்கியிருக்கிறார்கள். வாகன சோதனைகளை மேற்கொண்டு வருகிறார்கள். கார் டிக்கியைத் திறந்துகாட்டு, டூவீலர் பெட்ரோல் டேங்க்கை திறந்து காட்டு என்கிற அளவுக்கு சோதனைகள் நடைபெறுகின்றன. குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணமாக எடுத்துச் சென்றால், அது குறித்த ஆவணங்களைக் காட்டியாக வேண்டும். இதனால், விவசாயிகள், வணிகர்கள், சிறிய அளவில் தொழில் புரிவோர் உள்ளிட்ட பலரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறார்கள். எனினும், தேர்தல் நேரத்தில் இத்தகைய சோதனைகளை செய்வது வழக்கம்தான் என்பதால், வாக்காளருக்குரிய கடமையுடன் அதனை ஏற்றுக் கொள்கிறார்கள். இந்த வாக்காளர்களின் ஆதரவு மூலமாக நாளை ஆட்சிக்கு வரப்போகிற அரசியல் கட்சியினரின் பணப் பரிமாற்றத்தை தேர்தல் பறக்கும் படை எந்தளவு கண்காணித்து பிடிக்கிறது என்பதுதான் கேள்விக்குறி. பணப்பட்டுவாடா இல்லாமல் தேர்தல் இல்லை என்கிற நிலைக்கு அரசியல் கட்சிகளும் வந்துவிட்டன. மக்களும் எதிர் பார்க்கும் நிலையில் உள்ளனர். இதில், எதிர்க்கட்சிக் கூட்டணி யோ பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பதுபோல பணம் தரும். அதற்கான நிதிஆதாரத்தை திரட்டி, அதன்பிறகே களம் இறங்க வேண்டும். ஆளுங்கட்சியின் பட்ஜெட் பெரியது. அதனால் பல இடங்களுக்கு முன்கூட்டியே போய்ச் சேர்ந்துவிட்டது. மற்ற இடங்களுக்கான பணப்பரிவர்த்தனைக்கான வியூகங்கள் கச்சித மாக வகுக்கப்படும். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலின்போது திருப்பூரில் 3 கண்டெய்னர் நிறைய பணம் சிக்கியது. அது, பேங்க் பணம் என ஆவணங்கள் லேட்டாகக் காட்டப்பட்டு, விடுவிக்கப் பட்டது. மத்திய அரசு இலட்சினையுடனான ஆம்புலன்ஸில் பணத்தைக் கடத்தினார் ஆளுந்தரப்புக்கு வேண்டியவரான கரூர் அன்புநாதன். அதனை காவல்துறையின் பெண் எஸ்.பி. கையும் களவுமாகப் பிடித்தார். அந்த எஸ்.பி.க்கு கிடைத்தது டிரான்ஸ்பர். கரூர் அன்புநாதனுக்கு கிடைத்தது, வழக்குகளிலிருந்து விடுதலை. இதுதான் தேர்தல் பறக்கும் படையின் செயல்திறன்.